அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது தூக்கம். ஆனால், அதிலும் பெண்களுக்குப் பாரபட்சம்தான். `ஆணைவிடப் பெண் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். `ஆணைவிட குறைந்தது இருபது நிமிடங்களாவது அதிக நேரம் தூங்க வேண்டும்’ என்று நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறைந்தது ஓர் ஆண் ஆறு மணி நேரமும், பெண் ஏழு மணி நேரமும் தூங்க வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் தெரிவிக்கும் கருத்து. ஆண்களைவிடப் பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும்... ஏன்?
அவர்கள் ஒரேயொரு வேலையை மட்டும் பார்ப்பதில்லை. காலையிலிருந்து கொட்டிக்கிடக்கின்றன வீட்டு வேலைகள். வெளியே வேலைக்குச் செல்பவராக இருந்தால் வீடு, பணியிடம் என இரட்டைச் சுமை தலையில் விழுகிறது பெண்ணுக்கு. எல்லா வேலைகளையும் முடித்து உறங்கப் போவதற்கு குறைந்தது இரவு 11 மணியாவது ஆகிவிடுகிறது. மீண்டும் காலையில் ஐந்து மணிக்காவது எழுந்தால்தான் அன்றைய வீட்டுச் சக்கரத்தின் சீரான இயக்கத்தை ஆரம்பிக்க முடியும். குழந்தைகள், கணவர், வீட்டிலுள்ள பெரியவர்கள் அனைவருக்கும் அவரவருக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கமுடியும். இதில் சில பெண்கள், விதிவிலக்காக இருக்கலாம். பல பெண்கள் இதுபோன்ற வேலைகளோடு அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே கண்டதையும் நினைத்து அதிகமாகச் சிந்திப்பார்கள். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்ய அவர்கள் அதிக நேரம் தூங்கவேண்டியது அவசியமாகிறது.
அதிக நேரம் தூங்கலாம்தான். நேரம்? பெரும்பாலான பெண்கள் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர். நேரம் இருந்தும் தூக்கம் வராத, தூங்காத பெண்களும் இருக்கிறார்கள். `இப்படி மிகக் குறைவான நேரம் தூங்குவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன’ என்கிறார் மகளிர் நல மருத்துவர் மனுலட்சுமி. அந்த பாதிப்புகளைப் பற்றி விரிவாக விளக்குகிறார்.
அதிக நேரம் தூங்கலாம்தான். நேரம்? பெரும்பாலான பெண்கள் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர். நேரம் இருந்தும் தூக்கம் வராத, தூங்காத பெண்களும் இருக்கிறார்கள். `இப்படி மிகக் குறைவான நேரம் தூங்குவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன’ என்கிறார் மகளிர் நல மருத்துவர் மனுலட்சுமி. அந்த பாதிப்புகளைப் பற்றி விரிவாக விளக்குகிறார்.
மூளைச் செயல்திறன் பாதிக்கும்!
தேவையான நேரத்தைவிட குறைவாகத் தூங்கும்போது மூளையின் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்யப் போதுமான கால அவகாசம் வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடன் செயல்பட முடியும். உறங்கும் நேரம் குறையும்போது, செயல்திறன் மங்கி அன்றாடச் செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியாது. இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருந்தால், பல்வேறு நோய்களுக்கு அதுவே வழிவகுத்துவிடும்.
கர்ப்ப காலங்களில் பிரச்னைகளை உண்டாக்கும்!
கருவில் இருக்கும் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.
இரவில் வியர்வை!
மெனோபாஸ் காலத்தில் இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்கும்.
மாதவிடாய்ச் சுழற்சி பாதிக்கும்!
தூங்கும்போது அடிக்கடி விழிப்பது போன்ற பழக்கத்தால், 'ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம்' (Premenstural Syndrome) பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் (Restless Leg Syndrome)
மாலை மற்றும் இரவு நேரங்களில் கால்கள் குடைய ஆரம்பிக்கும். அதிகமான வலி ஏற்பட்டு, கட்டுப்பாடில்லாமல் கால்கள் அசைய ஆரம்பிக்கும். இதற்கு 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' என்று பெயர். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இந்த பாதிப்பு ஏற்படும். ஆனால், பெண்களைத்தான் அதிகமாக இது பாதிக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இது, ஹார்மோன் மற்றும் நரம்புக் கோளாறுகளால்தான் ஏற்படுகிறது. அதற்கு அடிப்படைக் காரணமாக 'தூக்கம்' இருக்கிறது.
பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.,எஸ்.,):
நம் நாட்டில் மூன்று பெண்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் தூக்கமின்மையும், குறைவான நேரத் தூக்கமும்தான். இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்பத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மனஅழுத்தத்துக்கு ஆளாகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் அதிகமான உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும். குழந்தையின்மை ஏற்படுவதற்கு இந்தக் குறைபாடும் ஒரு காரணம்.
செகண்டரி இன்சோம்னியா பாதிப்பு உண்டாகும்:
தூக்கமின்மையை 'இன்சோம்னியா' என்று அழைப்போம். அதில் ஒருவகைதான் `செகண்டரி இன்சோம்னியா.’ இதனால், மனஅழுத்தம், மனப்பதற்றம் போன்றவை ஏற்படும். ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படும்.
இவை மட்டுமல்லாமல், பல்வேறு வகையான மனநலப் பாதிப்புகளும், டயப்பட்டீஸ், இதய பாதிப்புகளும் பெண்களுக்கு உண்டாகின்றன.
நல்ல தூக்கம் பெற என்ன செய்ய வேண்டும் ?
நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனால் வழங்கப்படும் சில அறிவுரைகள்...
எந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்று ஓர் அட்டவணையைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அதைப் பின்பற்றத் தொடங்கினாலே போதுமான அளவுக்குத் தூக்கத்துக்கான நேரத்தைப் பெற முடியும். விடுமுறை நாள்களில்கூட அந்த அட்டவணையைப் பின்பற்றிச் செயல்படுவது நல்லது.
தூங்குவதற்கு முன்னர் இளஞ் சூடான நீர்க் குளியல், சூடான பால் அருந்துதல் உதவும்.
ஒளி குறைவான விளக்குகளையே படுக்கையறையில் பயன்படுத்த வேண்டும். ஏ.சி-யோ, மின்விசிறியோ உங்கள் உடல் வெப்பநிலைக்கு ஏற்ற அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நல்ல மெத்தை, தலையணை, மெத்தை விரிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
இரவு நேரத்தில் லேப்டாப், மொபைல்போனைத் தவிர்ப்பது நல்லது. தூங்குவதற்கு முன்னர் தொலைக்காட்சிப் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
தினமும் காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா செய்துவந்தாலும் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
வீட்டில் உள்ள மற்றவர்களுடன் வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.