மாதவிடாய் பற்றி ஆண்களும் அறிந்துகொள்ளவேண்டும். இந்த மாதவிடாய் என்றால் என்ன? அதை ஏன் ஒரு ஆண் அறிந்துகொள்ளவேண்டும்?
ஒரு பெண் கர்ப்பம் தரிக்க தகுதியான பின் , அவளுடைய உடம்பில் ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை விருத்தியடையும். அந்த முட்டை கருத்தரித்தால், உள்வாங்கிக்கொள்ள கர்ப்பைப்பையின் உட்பகுதியும் மாதாமாதம் வளர்ச்சியடைந்து தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளும். அந்த முட்டை கருத்தரிக்காமல் அழிந்துபோகும்போது வளர்ச்சியடைந்த கர்ப்பைப்பையின் உட்பகுதியும், சிதைவடைந்து இரத்தமாக வெளியேறும்.
ஆக, மாதவிடாய் என்பது, ஒரு உயிரை உள்வாங்க தயாரான கர்ப்பைப்பையின் உட்பகுதியின் வெளியேற்றமேயன்றி, அது ஒரு தீண்டத்தகாத விடயமோ, அல்லது பெண்ணை ஓரம்கட்டி வைக்கவேண்டியதற்கான காரணமோ இல்லை.
இதன்போது இரத்தம் வெளியேறுவது மட்டுமா நடக்கும்?
இல்லை.
உங்கள் வாயினுள் ஒரு சிறிய கட்டி வளர்கிறது, பிறகு அது சிதைவடைந்து இரத்தமாக வெளியேறும்போது உங்களுக்கு எப்படி இருக்கும் என ஆண்கள் கற்பனை செய்துபாருங்கள். ஒரு சிறிய கட்டிக்கே அப்படியென்றால், கர்ப்பைப்பையின் உட்பகுதி முழுவதுமாக சிதைவடையும் போது எவ்வளவு அசெளகரியங்கள் ஒரு பெண்ணுக்கு ஏற்படும். அதுவும் ஒவ்வொரு மாதமும் இந்த அசெளகரியத்தை ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டும் என்பது எவ்வளவு கடினமானதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
ஒரு பெண்ணின் உள்ளே எழுந்தமானமாக முட்டை வளர்வதில்லை. இதன்போது எக்கச்சக்கமான ஹோர்மோன்கள் சுரக்கப்படும். இந்த ஹோர்மோன்கள்தான் கர்ப்பைப்பையின் உட்பகுதியின் வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாமல், ஒரு குழந்தை உருவானால், அவளில் உடம்பில் ஏற்படவேண்டிய பல மாற்றங்களை உருவாக்கும்.
உதாரணத்துக்கு, ஒரு பெண் பால் கொடுப்பதற்கு ஒப்பான ஒருசில மாற்றங்கள் மார்பில் ஏற்படும். இதனாலும் எக்கச்சக்கமான அசெளகரியங்கள் ஏற்படும்.
அந்தக்ஹோர்மன்களின் தாக்கத்தால் பெண்கள் மன அளவிலும் பல அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். அதனால் அவர்களின் கோபம், எரிச்சலடையும் தன்மை அதிகரிக்கும். இவ்வாறு ஒரு பெண் மாதாமாதம் பல உடல், உள அழுத்தத்துக்கு உள்ளாவது, என்றோ ஒருநாள் அவள் ஒரு ஆணுக்குப் பெற்றுக்கொடுக்கப்போகும் குழந்தைக்காக,அதனால் அந்த மாதாந்த அசெளகரியத்தை எதிர்கொள்ள ஆண்களாகிய நாமும் ஏதோ ஒருவகையில் பங்களிப்புச் செய்ய கடமைப்பட்டவர்களாகிறோம் இல்லையா?
இது ஒரு கணவன் தன் மனைவியை கவனித்துக்கொள்வதாக மட்டும் அமைந்துவிடுவதில்லை, ஒரு சகோதரியை சகோதரன் கவனித்துக்கொள்ளளாம், ஒரு மகன் தன் தாயினைக் கவனித்துக்கொள்ளளாம், ஒரு தகப்பன் தன் மகளினை கவனித்துக்கொள்ளளாம்.
எவ்வாறு கவனித்துக்கொள்ளளாம்?
இதன்போது கவனித்துக்கொள்ளுதல் என்பது ஒரு பெண்ணை நோயாளிபோல கவனித்துக்கொள்வதல்ல.
1.உங்களோடு வாழும் பெண் ( தாய், சகோதரி, மனைவி ) இவ்வாறான நாட்களில் எரிச்சலடைந்தால் பதிலுக்கு நீங்களும் ஆத்திரப்படாமல் இருக்கலாம்.
2.இந்த நாட்களில் உங்களுக்கு தேநீர் போட்டுத்தர மறந்துவிட்டாள்,சாப்பாடு தர பிந்திவிட்டது போன்ற அற்ப காரணங்களுக்காக ஆத்திரப்படாமல் இருக்கலாம்.
3.ஒரு பெண் கடையில் நப்கின் வாங்கும்போது கேலி செய்வதுபோல பார்ப்பதைத் தவிர்க்கலாம்.
4.ஒரு பெண்பாவித்த நப்கின்னை குப்பத்தொட்டியில் எறிவதை கேலி செய்யாமல் இருக்கலாம்.
5.உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நீங்களே நப்கின் வாங்கிக்கொடுக்கலாம்.
6.எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு பெண் தனக்கு மாதவிடாய் அதனால் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது என்று சொல்லக்கூடியளவு உரிமையை அல்லது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
ஒரு பெண்ணின் மனதில் நீங்கள் உயர்ந்த இடத்தைப்பெற்றுக்கொள்ள இவ்வாறான சின்ன சின்ன உதவிகளே போதும்.
அடுத்தமாதம் உங்கள் மனைவியோ, காதலியோ மாதவிடாயாய் இருக்கும்போது, " என்ன கஷ்டமாக இருக்கிறதா?" என்று ஆறுதலாய் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு, உங்கள் உறவில் எவ்வளவு சந்தோஷமான மாற்றங்கள் ஏற்படுகின்றது என்று பாருங்கள்.