எல்லா இடங்களிலும் சிரித்து கொண்டிருக்கும் சோ அழுத காட்சி வரலாற்றில் ஒன்றே ஒன்றுதான்.
அது காமராஜர் பணக்காரர் கைக் கூலி, டெல்லியில் இருந்து வரும் அரசியல்வாதி எல்லாம் காங்கிரஸ் பணக்காரர் வீடுகளில்தான் காமராஜரால் தங்க வைக்கப்படுகின்றனர் என எதிர்கட்சிகள் சர்ச்சை கிளப்பிய நேரம்.
காமராஜரைக் காணச் சென்ற சோவிடம் இதனைக் குறித்துச் சொல்லிக்கொண்டே சட்டென்று கேட்டார் காமராஜர்,
"நீ இவ்வளவு நாளும் இங்க வந்து போற, என்னைக்காவது உன்னை என்கூடச் சாப்பிட சொல்லியிருக்கேனா?"
இல்லை என தலையாட்டுகின்றார் சோ
ஒரு காபியாது கொடுத்திருக்கேனா?
நெற்றியினைச் சுருக்கி இல்லை என்கின்றார் சோ
இங்கு அவ்வளவுதான் வசதி . நானும் என் சமையல்காரனும் சாப்பிடுற அளவுதான் வசதின்னேன், இது வாடகை வீடுண்ணே
டெல்லியில் இருந்து திடீர்னு வாரவங்களுக்கு இங்க கொடுக்க ஒண்ணுமில்லை அதான் வசதி உள்ளவங்க வீட்டுக்கு அனுப்புறேன், இது குத்தமா
ஒரு ஒண்டிகட்டை வீட்டுல என்ன இருக்கும்ணு தெரியாம அவனுக இஷ்டத்துக்கு எழுதுறானுக" என்று சொல்லிவிட்டு கலங்குகின்றார் காமராஜர்.
சோ ராமசாமி “ அழுத இடம் இதுதான், இது ஒன்றுதான்.