நியாயமும் அநியாயமும் யாருக்கு பொருந்தும் - சியோ தமிழ்

Breaking

Wednesday, March 7, 2018

நியாயமும் அநியாயமும் யாருக்கு பொருந்தும்


ஒரு நாடு. ஒரு திருடன். அவன் பலே கெட்டிக்காரன்.
எந்த தவறை செய்தாலும் ஆதாரமில்லாமல் செய்வான்.
மாட்டிக் கொள்ள மாட்டான்.

அவனுக்கு எதிராக எந்த ஆதாரங்களும், சாட்சிகளும் இது நாள்வரை இல்லை.

அதனால் ஊரில் பெரிய மனிதராக வலம் வந்து கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்து ஆதாயங்களை அனுபவிக்க ஒரு கூட்டமும் இருந்தது.

'இவ்வளவு தைரியமாக உலவி வருகிறாயே! உனக்கு பயமாக இல்லையா?' என்று எல்லோரும் கேட்பார்கள்.

'நான் தவறு செய்வதை நிரூபிக்கும் ஆதாரம் இருந்தால் காண்பியுங்கள். பிறகு தண்டியுங்கள்', என்பான் திருடன்.அந்த நாட்டு அரசனும் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தான்.

அந்த நாட்டிற்கு ஒரு சாது வந்தார். அவரிடம் திருடனை பற்றியும், அரசனின் அமைதியை பற்றியும் மக்கள் முறையிட்டனர்.

ஒலை ஒன்றை எடுத்தார் சாது. அதில் ஏதோ எழுதினார். அதை அரசனிடம் கொடுத்தனுப்பினார்.

அன்று மாலை, திருடனை விருந்திற்கு அழைத்தார் அரசர். விருந்திற்கு சென்ற திருடன் வீடு திரும்பவில்லை. அன்று இரவே திருடன் தூக்கிலிடப்பட்டான்.

அவனுடைய ஆதரவாளர்கள் நேராக அரசனிடம் சென்றனர். திருடனை தூக்கிலிட்டதற்கான காரணத்தை கேட்டனர். அரசர் அமைதியாக பதிலளித்தார்.

'மக்களே உங்கள் நண்பரை நேற்று விருந்திற்கு அழைத்தேன்.
அப்போது அவன் ராஜ ரகசியத்தை திருடிவிட்டான்.
அதனால் அவன் தூக்கிலிடப்பட்டான்', என்றார் அரசர்.

'அப்படி என்ன பொல்லாத ரகசியம்?' என்று கேட்டார்கள் ஆதரவாளர்கள்.

'அது ராஜ ரகசியம். அதை தெரிந்து கொண்டவர்கள் யாரும் உயிருடன் இருக்க முடியாது.

நீங்கள் யாராவது தெரிந்து கொள்ள வேண்டுமா?', என்று கேட்டார் அரசர்.
அவ்வளவுதான். அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.

நடப்பவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசி பேசினார்.

'அரசே! அதென்ன ராஜ ரகசியம்? என்னிடமாவது சொல்லுங்கள்', என்று கேட்டார் அரசி.

சாது தனக்கு அனுப்பிய ஓலைச் சுவடியை காண்பித்தார் அரசர். அதில் பின்வரும் வரிகள் எழுதப்பட்டிருந்தது.

"நியாயத்தை கடைபிடித்து, சட்டத்தின் விதிகளையும் மேற்கோள் காட்டி பிறகு தண்டிக்க வேண்டும் என்பது நியாயத்தின் மீதும், தர்மத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அநியாயக்காரர்களுக்கு பொருந்தாது.

அநியாயக்காரர்களுக்கு முதலில் தண்டனையை கொடுங்கள்.

பிறகு அதை நியாயப்படுத்தும் விதிகளை தேடுங்கள்.

தண்ணீரில் வாழும் மீன்களுக்கு தண்டனையை தண்ணீரிலேயே தேடுவது புத்திசாலித்தனமல்ல."

என்று எழுதியிருந்தது.

Pages