வருடத்தின் எல்லா நாட்களிலும் தாய்மார்கள் கர்ப்பம் தரிக்கலாம். குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனாலும், ஆடி மாதம் கணவன்-மனைவி சேரக்கூடாது. சித்திரையில் பிள்ளை பிறக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அவ்வாறு கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள ஓர் அறிவியல் உண்மையைப் பற்றி பார்ப்போம்.
பொதுவாக, ஆடி மாதத்தில் கர்ப்பம் தரிக்கும்போது பெரும்பாலும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பு நிகழும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சித்திரையில் தான் அக்னி நட்சத்திரம் தொடங்கும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருப்பதால் வெயிலைத் தாங்க முடியாமல் தோல் சிவந்துவிடும்.
மேலும், தாய்ப்பால் மட்டுமே உட்கொள்ளும் குழந்தைக்கு உடலில் நீர்வற்றி, உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. சின்னச் சின்ன சூட்டுக் கொப்புளங்கள் உடல் முழுவதும் உண்டாகும். அச்சமயங்களில் அம்மை போடுவதற்கும் வாய்ப்புண்டு.
குழந்தையை நிறைய பேர் தூக்கிக் கொஞ்சுவதால் தொற்றுநோய்களும் ஏற்படலாம். அதேபோல் தாய்க்கும் அதிக வெப்பம் மற்றும் வியர்வையால் நாவறட்சி, மயக்கம், வாந்தி உண்டாகலாம். இது அதிகமாகும் போது பக்கவாதம் மற்றும் ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைதல் போன்ற பெரிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
இவற்றை எல்லாம் தவிர்ப்பதற்காக தான், சித்திரையில் பிள்ளை வேண்டாம் என்றனர் நம் முன்னோர்கள்.