திருவாரூர் தியாகராஜர் கோவிலின் 50 முக்கிய தகவல்கள் - சியோ தமிழ்

Breaking

Friday, June 15, 2018

திருவாரூர் தியாகராஜர் கோவிலின் 50 முக்கிய தகவல்கள்



                                                          

 1. சைவ கோவில்களில் மிகப்பெரியது இதுவே. கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பர்.

2. உலகிலேயே மிகப்பெரிய தேர் திருவாரூர்த் தேர்தான்.

3. திருவாரூர் கோவிலில் சோழப் பேரரசர்கள், நாயக்கமன்னர்கள், மராட்டிய மன்னர்கள் ஆகியோர் திருப்பணி செய்துள்ளனர்.

4. திருவாரூர் கோவில் பழமைச் சிறப்புடையது. தில்லை கோவிலையும் விட பழமையானது.

5. சேக்கிழார் இந்நகரம் தொன்மையானது என்றும், இது திருமகளால் வழிபடப் பெற்றது என்றும், சுந்தரர் பொருட்டுப் பரவையிடம் தூது

நடந்த இறைவனின் தாமரையடிகளின் மணம் தெருவில் வீசுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

6. கழற்சிங்க நாயனாரின் பட்டத்தரசி இறைவனுக்குரிய மலரினை எடுத்து முகர்ந்து பார்த்தாள் என்பதற்காகச் செருந்துறை நாயனார் அவள் மூக்கை அரிந்தது இத்தலத்தில்தான்.



7. இவ்வாலயம் தியாகராசர் திருக்கோவில் என்று இன்று அழைக்கப்படுகிறது. இதனுள் தேவாரத் தலங்களான பூங்கோவில், அரநெறி
ஆகிய இரண்டும் அமைந்துள்ளன.

8. சப்தவிடங்கத் தலங்களுள் முதலாவது இத்தலமாகும். நாகைக்காரோணம், திருநள்ளாறு, திருமுறைக்காடு, திருக்காறாயில்,
திருவாய்மூர், திருக்குவளை என்பன மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும்.

9. திருவாரூர் கோவிலுக்கு கமலாலயம் என்ற திருப்பெயரும் உண்டு. திருமகள் வருணனின் மகளாக பிறந்து திருமாலை மணம்புரிந்து
கொள்வதற்காக புற்றிடங்கொண்ட பெருமானை வழிபட்டு வரம் பெற்றாள். அதனால் இத்தலத்துக்கு கமலாலயம் என்னும் பெயர் வந்தது.

10. திருவாரூர் கோவிலில் உள்ள தேவாசிரிய மண்டபம் பெருஞ்சிறப்புக்குரியது. இங்கேதான் பெரிய புராணத்தின் முதல் நூலான
திருத்தொண்டத் தொகை பிறப்பதற்கு காரணமான அடியார்கள் எழுந்தருளினார்கள். திருத்தொண்டத் தொகை பிறந்த இடமும் இதுதான்.

11. தேவாரப் பாடல்களை அதிகமாகப் பெற்ற ஆலயங்களுள் இரண்டாவதாக திகழ்வது திருவாரூர். முதலாவதாக திகழ்வது தோணிபுரம்.
அதற்கு 71 பதிகங்கள் உள்ளன. இதற்கு 34 பதிகங்கள் இருக்கின்றன.

12. பஞ்ச பூதத் தலங்களுள் திருவாரூர் பிருதிவி(மண்)தலமாகத் திகழ்கிறது. காஞ்சீபுரத்தையும் பிருத்திவித் தலமாகச் சொல்வதுண்டு.

13. திருவாரூரில் பிறக்க முக்தி என்பார்கள்.

14. முதலாம் ஆதித்தன் (கி.பி. 871- 907) காலக் கல்வெட்டு முதல் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம்
வரையிலான கல்வெட்டுக்கள் கோவிலில் காணப்படுகின்றன.

15. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்து விளங்குவது திருவாரூர் ஆகும்.

16. திருவாரூரில்தான் சுந்தரமூர்த்தி சாமிகளின் அருள்வாழ்வு மலர்ந்தது.

17. திருவாரூர் கோவில் கட்டப்பட்ட காலம் வரையறுத்துக் கூறப்படவில்லை. தமிழகத்தை ஆண்ட புகழ் பெற்ற மன்னர்களின்
கைவண்ணமும் கல்வெட்டுகளும் இத்திருக்கோவிலில் இடம் பெற்றுள்ளன.

18. திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர். 330 தேவாரப் பாடல்களும்,
திருவாசப் பாடல்களும் உள்ளன.

19. அருணகிரிநாதர், சங்கீத மும்மூர்த்திகள் தியாகையர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞான
சம்பந்தர், இரட்டைப் புலவர், அந்தகக் கண் வீரராகவ முதலியார், மாமன்னார் சகாஜி, வள்ளலார் ராமலிங்க அடிகளார் முதலானோராலும் திருவாரூர் திருத்தலம் போற்றிப் பாடப் பெற்றுள்ளது.

20. ஸ்ரீ தியாகராஜ சாமி கர்ப்பக்கிரக விமானத்துக்கு தங்கத் தகடு போர்த்தி முதலாம் ராஜேந்திர சோழன் குடமுழுக்கு செய்ததாக
இக்கோவிலின் கல்வெட்டு கூறுகிறது.

21. 17-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பலநூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

22. இக்கோவில் அம்பிகை ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை) கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்) இச்சா சக்தியாகவும் (கொண்டி)
வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.

23. மதுரையில் இறைவன் 64 திருவிளையாடல்கள் புரிந்தது போல் இவ்வூர் தியாகராசர் பெருமாள் 364 திருவிளையாடல்கள் புரிந்ததாகப்
புராண வரலாறு கூறுகிறது.

24. தியாகராஜ சாமியை திருமால் தன் மார்பில் வைத்து வழிபட்டாராம். அவரின் மூச்சுக் காற்றாய் விளங்குவதால் தியாகராஜ சாமிக்கு
அஜபா நடனமூர்த்தி என்றும் பெயர்.

25. சுந்தரமூர்த்தி சாமிகள் இவ்வூர் இறைவன் தியாகராஜாவிடம் தோழமை கொண்டு பழகினார் என்று புராணம் கூறுகிறது. இவர் இழந்த
கண்ணில் ஒன்றை மீளா அடிமை உமக்கே என்ற பதிகம் பாடி இக்கோவிலில் பெற்றார்.

26. எங்குமே கண்டறிய முடியாத எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளை திருவாரூரில் கண்டு கொண்டேன் கண்டவுடன் அவன்
ஒருவனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டேன் என்றார் அப்பர் பெருமான்.

27. திருவாரூர் தலம் பற்றி செந்தமிழ் இலக்கியங்களில் மட்டுமின்றி வடமொழி, தெலுங்கு, மராத்தி போன்ற பல மொழி இலக்கியங்களிலும் போற்றிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

28. திருவாரூர் எப்போது தோன்றியது என்று கூற முடியாத மிகப்பழமையான புண்ணியத் தலங்களில் ஒன்றாகும்.

29. திருவாரூர் என்றால் அருமையான ஊர், அரிய ஊர் என்று பொருள்.

30. பிரம்மன், விஷ்ணு, பதினோரு ருத்திரர்கள், தேவ தேவியர்கள், இந்திரன் முதலான வானவர்கள், பிற வானலோக வாசிகள்
அனைவரும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் கூடியிருந்து சிவபூஜை செய்து பரம்பொருளை வழிபட்ட அரிய தலம்.

31. கோடி முனிவர்கள் ஒரே சமயத்தில் வழிபட்டுக் கோடி வடிவமாக ஈசன் திருக்காட்சியைப் பெற்ற அருமையான அரிய தலம்.

32. சப்தரிஷிகள் ஒரே சமயத்தில் ஒன்றாக வந்து சிவபூஜை புரிந்ததாலும் திருவாரூர் என்று பெயர் பெற்றது.

33. திருவாரூர் உலகத்திற்கு மூலாதாரமாக விளங்குவதால் மூலாதாரபுரம் என்று பெயர் பெற்றது.

34. பெரிய புராணமும் பரிபாடல் என்ற சங்க இலக்கியமும் தேவர்கள் இத்தலத்தில் ஈசனைப் போற்றிப் புரிந்த பூஜையையும் யாகங்களையும் போற்றுகின்றன.

35. திருவாரூர் கோவிலில் யாக சாலை, மகாயாக சாலை, பிள்ளையார் யாக சாலை, முருகன் யாகசாலை எனப் பல பெயர்களில் யாகசாலைகள் உள்ளன.

36. படைக்கும் தெய்வம் பிரம்மன் நாள்தோறும் சிவபூஜை செய்து வாழ்ந்த தலமாதலால் திருவாரூக்கு பிரம்மமேசம் என்று பெயர்பெற்றது.

37. பல்வேறு திருத்தலங்களிலும் கிடைக்காத வரங்கள் திருவாரூரில் ஆரூரராகிய வான்மீக நாதரையும் தியாகராஜரையும் வழிபடுவதால்
கிடைக்கும்.

38. திருவாரூரில் ஆண்டிற்கு ஐம்பத்திரண்டு திருவிழாக்கள் நடைபெற்று திருவிழாவூராக திகழ்ந்ததைக் கோவில் கல்வெட்டு
போற்றுகின்றது.

39. திருவாரூர்ப் பொற்கோவிலைச் சங்கப் புலவர் பரணரின் சிவபெருமான் திருவந்தாதியும் திருநாவுக்கரசர் தேவாரமும் சேக்கிழாரின்

பெரிய புராணமும் போற்றுகின்றன. செம்பொன் தியாகர் என்ற பெயர் தியாகராஜர் திருமேனி தங்கத் திருமேனியாகத் திகழ்ந்ததைத்
தெரிவிக்கின்றது.

40. சோழ மன்னர்கள் தியாகராஜ சுவாமிக்குப் பொற்பல்லக்கு முதலியவற்றைக் காணிக்கையாக அளித்ததையும் கோவிலில் பொன்தகடு
வேய்ந்ததையும் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன.

41. பட்டினச்சாமி என்ற தாமரைப் பூ வியாபாரி ஒரு வைகாசித் திருநாளன்று தாமரைப் பூக்களை விற்காமல் அத்தனைப் பூக்களையும்
ஆனந்தேஸ்வரருக்கு அளித்தார். இதன் பலனாக அந்த வியாபாரி மறுபிறவியில் பாராளும் மன்னர் ஆனார்.

42. ஆரூர் இறைவனை வழிபட்ட முனிவர்கள், சித்தர்களின் உருவங்கள் பல்வேறு சந்நிதிகளிலும் சந்நிதிச் சுவர்களிலும் பிரகாரங்களிலும்
தூண்களிலும் காணப்படுகின்றன. திருக்குளத்து நாகநாதர் கோவில் கருவறை வாசலிலும் முனிவர் சித்தர் உருவங்கள் உள்ளன.

43. பிள்ளையில்லாத அம்சன் என்ற அரசன் சித்தீஸ்வரரின் திருவருளால் பிள்ளைப்பேறு பெற்றதோடு பல அரிய சித்திகளும் பெற்று சித்தீசன் என்றே பெயர் கொண்டான்.

44. அரசர்களும் எண்ணற்ற பக்தர்களும் காலந்தோறும் திருவாரூர்ப் பெருமானைப் பூஜித்து வாழ்வும் வளமும் பெற்றுள்ளனர். இவ்வாறு காலந்தோறும் ஆயிரக்கணக் கானவர்களால் பிரதிட்டைசெய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்களைக் காட்டும் வகையில் ஆயிரம் சிறுசிறு லிங்கங் களைக் கொண்ட சகஸ்ரலிங்கம் உட்பிரகாரத்தில் உள்ளது.

45. அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம்.

46. சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்தத் (கமலாபுரம்) தலம்; இது திருவாரூரிலிருந்து மன்னார்குடி
பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோயில் ஏதுமில்லை (2005). திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே,
பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.

47. திருவாரூர் - கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.

48. திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.

49. சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.

50 . வாழ்வில் அனைத்து விதமான குற்றங்குறைகளையும் போக்கி வளமான நலமான வாழ்வருளிச் சிறப்புடன் வாழவைக்கும்
                                                          

No comments:

Post a Comment

Pages