வெளிநாட்டு வாழ்க்கை என்றால் பணம்.. ஆடம்பரம்...வரம் என்றே அறிந்திருக்கும் பலருக்கும் அதன் பின்னால் ஔிந்திருக்கும் தியாகம் சாபம் என்ற வார்த்தைகளின் உண்மை தெரிவதில்லை.....
கணவன் அருகில் இருக்கும் போது கணவனோடும அவன் ஊருக்குச் சென்றபின் அவன் நினைவுகளோடும் மட்டுமே வாழும் பெண்களின் வாழ்க்கை வரம் அல்ல சாபமே....
அனுதாபம் என்ற பெயரில் சில ஆண்களின் வக்கிரப் பார்வையை அலட்சியம் செய்தும்... ஆறுதல் என்ற பெயரில் சில பெண்களின் அர்த்தமற்ற கேள்விகளுக்கு பதிலாக புன்னகையோடும்...கடந்து செல்ல பழகிக் கொண்ட சகோதரிகளின் வாழ்க்கை வரம் அல்ல சாபமே....
அக்கம் பக்கம் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க தன்னை ஒப்பனை செய்யக்கூட தயங்கியும்.... அவசர உதவிக்கு கூட அந்நிய ஆடவர்களிடம் கேட்கத் தயங்கியும் தானே அத்தனை குடும்ப சுமையைத் தாங்கும் பெண்களின் வாழ்க்கை வரம் அல்ல சாபமே....
திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு ஊர் சென்று மீண்டும் திரும்பி வரும்போது அந்தக்குழந்தையை வாரி அணைத்து தூக்கும் போது அந்தக்குழந்தை "மாமா" என்றழைக்கும் போது அந்த ஆண்களின் மனநிலை பெற்றிருப்பது வரம் அல்ல சாபமே....
விஷேச நாட்கள் நல்லவை கெட்டவை போன்ற நேரங்களில் கூட அலைபேசியில் மட்டுமே உரையாடிவிட்டு தங்களின் இயலாமையைக் கூட வெளியே காட்டிக் கொள்ளாமல் அலைபேசி இணைப்பை துண்டித்து விட்டு அந்த ஆண்களின் படும் வேதனை வரம் அல்ல சாபமே.....
கணவன் வரும் நாட்களை எதிர்பார்த்து நாட்காட்டிகளை வேகமாக கிழித்து அந்த நாளும் வந்து அன்பான வெட்கம் கலந்த பார்வையோடு எதிர்கொள்ளும் போதும்.... அவன் வந்த நாட்களும் வேகமாக உருண்டோட ஊருக்குச் செல்லும் நாளும் வந்து விமானநிலையத்தில் கையசைத்து விடைபெற்று சென்ற பின் வெடித்து அழும் தம்பதியரின் வாழ்க்கை வரம் அல்ல சாபமே....
தன் குடும்பத்திற்காக தன் பிள்ளைகள் மகிழ்ச்சிக்காக பிரிந்திருந்து பிள்ளைகள் வளர்ந்த பின் வயதும் கடந்து தன் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கும் போது அவர்கள் இழந்திருப்பது சின்ன சின்ன சந்தோஷங்களை மட்டுமல்ல தங்கள் இளமையையும் சேர்த்தே தான்.....

No comments:
Post a Comment