இதுதான் உண்மை காதல் - சியோ தமிழ்

Breaking

Wednesday, November 22, 2017

இதுதான் உண்மை காதல்


அந்த முதியவர் தடுத்தடுமாறியபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். எனது டூ வீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

“என்னங்க ஆச்சு”னு கேட்டேன்.
“வேகமாக வந்த ஆட்டோ சக்கரம் காலுல ஏறிடுச்சு தம்பி” என்றார்.
“வாங்க … எனக்கு தெரிந்த டாக்டர் பக்கத்துல தான் இருக்கார், கட்டுப் போட்டு மொதல்ல ரத்தம் கசியறத நிறுத்தணும். கூடவே டி.டி இஞ்செக்‌ஷனும் போட்டுக்கலாம்!” என்றேன்.

வேண்டாம் என்று மறுத்தவரை விடாப்பிடியாக அழைத்து சென்றேன்.

எல்லாம் முடியவும்…. “மணி என்ன தம்பி…. நேரமாயிடுச்சே.. நேரமாயிடுச்சே…!” என்று பறந்தார் பெரியவர்.

“அப்படி என்னங்க அவசரம்..?! என்றேன் நான்.
“என் பெண்டாட்டி பசியோட வீட்டில இருக்கா. அவளுக்கு இட்லி வாங்கிட்டு போகணும்..!” என்றார்.
“என்ன பெரியவரே… உங்க காலுல அடிப்பட்டிருக்கு… இப்ப இட்லியா முக்கியம்…?! லேட்டா போன தான் என்ன… திட்டுவாங்களா…?!” என்று சீண்டினேன்.

அதற்கு அவர் “அவ அஞ்சு வருஷமா மனநிலை பாதிச்சு நினைவில்லாம இருக்கா தம்பி. எல்லா ஞாபகமும் போயிடுச்சி! நான் யார்னுகூட அவளுக்குத் தெரியாது…!” என

நான் “அப்படிப்பட்டவங்க உங்களை ஏன் லேட்டுன்னு எப்படி கேப்பாங்க…? அவங்களுக்குத் தான் உங்களை யாரென்றே தெரியாதே! கவலை படாதீங்க” என்றேன்.

அதற்கு அந்த முதியவர் புன்னகைத்தபடியே என்னை பார்த்து சொன்னார் “ஆனா அவ யாருன்னு எனக்குத் தெரியுமே தம்பி..!”


Pages