தலைவன் கொண்டு வருகின்ற நெற்கதிர்களை மனையாள் வாங்கி சாமியறைக்கு கொண்டு செல்லும் வழக்கம் உண்டு. அதன்பின்னர் கடவுளை வணங்கி மாவிலை கொண்டு புதிய நெற்கதிர்களை சாமியறை மற்றும் சமையல் அறைகளில் கட்டித் தொங்கவிடுவார்கள்.
மிகுதியாக உள்ள நெற்கதிர்களை அரிசியாக்கி தைத்திருநாளுக்காக காத்திருப்பார்கள். பாடுபட்டு உழைத்து அந்த உழைப்பின் மூலம் வளர்ச்சி அடைந்த நெற்கதிர்களை நல்ல நாளில் “புதிர் எடுப்பதன் மூலம் வருடம் முழுவதும் குறைவில்லாத உணவுச் செல்வம் கிடைக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும்.
தைத்திருநாள் என்பது உழவுக்கு உதவிய சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும். யாழ்ப்பாணத்து மக்கள் தைப்பொங்கலுக்கு உரிய ஆயத்தங்களை முதல் நாளே தொடங்கி விடுவதோடு முதல் நாள் நடைபெறும் சந்தை முக்கியமான ஒரு சந்தையாக கருதப்படும். இதைப் “பொங்கல் சந்தை” என சிறப்பாக அழைப்பார்கள். பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் தங்களிடம் இருந்தால்.
அதை சந்தைக்கு கொண்டு சென்று விற்றுவிட்டு தமக்குத் தேவையான பொங்கல் பொருட்களை வாங்குவார்கள்.
புதுப்பானை, புதுஅரிசி, சர்க்கரை, பயறு, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி, கற்ப்பூரம், கரும்பு, இஞ்சி, மஞசள் போன்ற பொருட்கள் யாழ் மக்களுடைய பொங்கலில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இப்பொருட்கள் அனைத்தையும் முதல் நாளே வாங்கி பொங்கலை ஆவலோடு வரவேற்பார்கள்.
தைத்திருநாள் அன்று அதிகாலை விழித்தெழுந்து குளித்து, வீடு பெருக்கி, கழுவி, முற்றம் கூட்டி, வாசலில் சாணம் கொண்டு மெழுகி அதில் உலக்கை வைத்து அரிசி மா செங்கட்டி வைத்து கோலம் போடுவார்கள். நாற்சதுரமாக நாற்புறமும் வாசல் வைத்து அந்த கோலம் போடப்படும் பழக்கம் அவர்களிடம் உண்டு. கோலத்தின் நடுவில் ஒரு மூலையில் மூன்று கல் வைத்து அடுப்பைத் தயார்ப்படுத்துவார்கள்.
குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடி நிற்க பிள்ளையார் பிடித்து, நிறைகுடம் குத்துவிளக்கு வைத்து, அடுப்பில் நெருப்பு மூட்டி, புதுப்பானை வைத்து, பால் பொங்கும்போது புது அரிசியை வீட்டுத்தலைவர் பானையில் இட மகிழ்ச்சியுடன் பொங்கலிடுவார்கள்.
புதுப்பானைப் பொங்கலை மூன்று வாழை இலைகளில் படைத்து, தேங்காய் உடைத்து பூஜைப் பொருட்கள்கொண்டு அனைவரும் பக்தியோடு சூரியனை வணங்குவார்கள். இறைவனுக்கு படைத்த பொங்கலை அனைவரும் சேர்ந்து உண்டு மகிழந்து பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
பொங்கல் தினத்திற்கு அடுத்தநாளை மாட்டுப்பொங்கல் தினமாக கொண்டாடும் வழக்கமும் அவர்களிடம் உண்டு. உழவுக்கு உதவிய மாட்டுக்கு நன்றி செலுத்தும் முகமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடும் மரபு காணப்படுகிறது.
வீட்டு சாமியறையிலும் சமையலறையிலும் கட்டப்பட்ட “புதிர்” நெல் அடுத்த வருடம் புதிர் எடுக்கும் வரை அப்படியே இருக்கும். பொதுவாக பொங்கல் தினம் முடிவடைந்த பின்னர் பொதுவான நாளில் “அருவி வெட்டு” அல்லது நெல் அறுப்பு” இடம்பெறும்.